வியாழன், 23 ஜூலை, 2015





தமிழர் திருமணத்தில் தாலி உண்டா?

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஓர்அறிவிப்பு வெளி வந்தது; தாலியைக் குறித்து ஒட்டி வெட்டிப் பேசும் விவாதம் அது - அதனைக் கண்ணுற்ற இந்துத்துவா சக்திகள் ஆகா - இந்துக் கலாச்சாரத்துக்கு ஆபத்து! ஆபத்து!! இதனை அனுமதி யோம்! என்று ஆயிரம் கால் மிருகமாகக் கர்ச்சித்தனர். அந்த நிறுவனத்துக்குப் பல வகை களிலும் அழுத்தம் கொடுத்தனர் - ஒரு  கட்டத்தில் அச்சுறுத்தவும் செய்தனர்.

அதை ஒளிபரப்பி விடுவார்களோ என்ற எதிர்பார்ப்பில் கடந்த எட்டாம் தேதி புதிய தலைமுறை அலுவலகத்துக்குள்ளேயே தாக்குதல் தொடுத்துள்ளனர் - தடித்தனமாக - ஊடகவியலாளரான பெண்ணொருவரும் தாக்கப்பட்டுள்ளார். அத்துடன் அவர்களின் அராஜகம் அடங்கிடவில்லை.

12.3.2015 வியாழன் அதிகாலை 3 மணியளவில் டிபன்பாக்ஸ் வெடி குண்டு களை புதிய தலைமுறை அலுவலகத்தில் வீசி எறிந்து தங்களின் வெறி உணர்வைத் தீர்த்துக் கொண்டனர்.

மதுரையைத் தலைமையிடமாகக் கொண்ட இந்து இளைஞர்சேனா என்ற அமைப்பின் தலைவர் ஜெயம் பாண்டியன் என்பவர் எங்கள் அமைப்புதான் இதனைச் செய்தது; நாங்கள் அதற்குப் பொறுப்பு ஏற்றுக் கொள்கிறோம் என்று சொல்லி மதுரை ஆறாவது ஜுடிஷியல் மாஜிஸ்ட் ரேட் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

நீதிமன்ற காவலில் வரும் 19ஆம் தேதி வரை வைக்க நீதிமன்றம் ஆணை பிறப்பித் துள்ளது. மேலும் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்துத்துவாவாதிகளைப் பொறுத்தவரை பல்வேறு பெயர்களைச் சூட்டிக் கொள்வார்கள். ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங்பரிவார்கள் மற்றும் பிஜேபியினர் இது போன்ற சந்தர்ப்பங்களில் என்ன செய்வார்கள் - சொல்லுவார்கள்?

எங்களுக்கும் அந்த அமைப்புக்கும் சம்பந்தமேயில்லை என்ற துணியைப் போட்டுத் தாண்டுவார்கள்

காந்தியாரை நாதுராம் கோட்சே என்ற பார்ப்பான் சுட்டுக் கொன்றபோதும் (30.1.1948) அப்படித்தான் சொன்னார்கள். கோட்சே ஆர்.எஸ்.எஸ். அல்ல - இந்து மகாசபையைச் சேர்ந்தவர் என்று சாதித் தார்கள்.

(ஆனால் அவரின் குடும்பத்தவர் களோ காந்தி கொலையில் சம்பந்தப்பட்டு ஆயுள் தண்டனை பெற்று விடுதலையான நாதுராம் கோட்சேயின் உடன்பிறப்பான கோபால் கோட்சேவோ நாதுராம் ஆர்.எஸ்.எஸ்.தான்; அவனை ஆர்.எஸ்.எஸ். அல்ல என்று அத்வானி கூறுவது அசல் கோழைத்தனம் என்று சொன்னதை நேர்முக பேட்டி மூலம் இந்துக் குழுமத்தைச் சேர்ந்த ஃப்ரண்ட் லைன் இதழ் அம்பலப்படுத்தவில்லையா?)

அதே வகையில் தான் புதிய தலைமுறை வன்முறைக்குத் தாங்கள் சம்பந்தம் இல்லை என்று சாதிக்கப் பார்க்கிறார்கள்.

ஆனால், எங்கள் அப்பன் குதிருக்குள் இல்லை என்று சொல்லுவதுபோல பிஜேபியின் தேசியச் செயலாளர் எச். ராஜா என்பவர் தனது இணைய தளத்தின் மூலம்  வெளியிட்டுள்ள அறிக்கையில் வன் முறைக்கு வக்காலத்து வாங்கியுள்ளார்.

தாலிபற்றி புதிய தலைமுறை தொலைக்காட்சியில் விவாதத்திற்கு தேர்ந்தெடுத்தது வன்மையாகக் கண்டிக்கத் தக்க ஒன்றாகும். இந்துக்கள் அமைதியானவர்கள் என்பதால்தான் இவர்கள் இந்துமத பழக்க வழக்கங் களில் மட்டும் கேலியும், கிண்டலும் செய்கின்றனர்.

பெண்களுக்குத் தாலி தேவையா? இல்லையா? என்ற விவாதத்திற்கு ஏற்பாடு செய்ததற்காக புதிய தலைமுறை தொலைக்காட்சி பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் - என்று பிஜேபியின் தேசிய செயலாளர் ஒருவர் அறிக்கை வெளியிடுகிறார் என்றால் இதன் உள்ளடக்கம் என்ன?

தாக்கியவர்களை எந்த இடத்திலும் கண்டிக்கவில்லை; மாறாக அவர்கள்மீது பொய் வழக்கு புனையப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் புதிய தலைமுறை மீதான தாக்குதலின் பின்னணியில் யார் இருக் கிறார்கள் என்பது அம்பலமாகி விட்டது.

ஒரு தனியார் தொலைக்காட்சியில் சிறையில் இருப்பவர்களைச் சந்தித்துள் ளீர்களே என்று கேட்கப்பட்ட கேள்விக்கு இவர் என்ன சொன்னார்? சிறையில் இருக்கும் எங்கள் தோழர்களைத் தானே பார்த்தோம் என்று, சொன்னதன் மூலம் புதிய தலைமுறை தாக்கப்பட்டதற்குப் பின்னணி யில் இருந்தவர்கள் இந்தக் கம்பெனிதான் என்பது வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. (காவல்துறை என்ன செய்யப் போகிறது என்பதைப் பார்ப்போம்!)

இந்துத்துவாவாதிகள் இதில் தலையிடு வதற்கு என்ன இருக்கிறது? தமிழர்களுக்கும் இந்து என்பதற்கும் என்ன சம்பந்தம்? தமிழர்கள் தங்களை இந்துக்கள் என்று ஒப்புக் கொள்ள மாட்டார்களே - சட்ட ரீதியான தில்லுமுல்லுகளால் அப்படி ஒரு சூழலை உருவாக்கி இருக்கலாம்; ஆனால் பண்பாட்டு ரீதியாக இந்துவுக்கும் தமிழர்களுக்கும் என்ன சம்பந்தம்?

தமிழ்க் கடல் மறைமலை அடிகள் எம்.எல். பிள்ளை என்று போற்றப்படும் கா. சுப்பிரமணியம்பிள்ளை, நாவலர் சோம சுந்தர பாரதியார் போன்றவர்கள் தமிழர்கள் இந்து அல்லவென்றும் சைவம் வேறு இந்து வேறு என்றும் வெட்டு ஒன்று துண்டு இரண்டாக வெட்டி வீழ்த்திவிட வில்லையா?

இந்த நிலையில் இந்து மதக் கலாச்சாரத்தை தமிழர்கள்மீது திணிக்க இவர்கள் யார்? நியாயப்படி இவர்கள் மேற்கொள்ளும் இதே அணுகுமுறையை பார்ப்பனர்களால் தமிழர்கள்மீது திணிக்கப் படும் சடங்குகளின்மீது தமிழர்களாகிய நாங்கள் மேற்கொள்ளலாமா?

தமிழன் கட்டிய கோயிலில் கருவறைக் குள் புகுந்து நாங்கள் மட்டும்தான் அர்ச்சனை செயயலாம்; நீ சூத்திரன் வெளியில் நில்லு! என்று பார்ப்பனர்கள் கூறும் கோயிலுக்குள் புகுந்து தமிழர்கள் இதே வேலையைச் செய்தால் என்னாவது?

தமிழ்நாட்டுக் கோயிலுக்குள் வழிபாட்டு முறை தமிழில் அல்லாமல் சமஸ்கிருதம் ஆதிக்கம் செலுத்துவதை எதிர்த்து நாமும் கோயிலுக்குள் புகுந்து ரகளையில் ஈடுபட லாமா? (ஆனால் அந்த வன்முறைகளில் நமக்கு நம்பிக்கை இல்லாததால் அறிவு வழியாக அற வழிப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறோம்).

தமிழர்களுக்குத் தாலி கிடையாது என்று அறிஞர் டாக்டர் இரா. இராசமாணிக்கனார் தனி நூலே எழுதியுள்ளார் (தமிழர் திருமணத்தில் தாலி - என்பது அந்நூலின் பெயர்)

தமிழர் திருமணம் தொடர்பாக அகநானூற்றில் (பாடல் எண் 86, 136) இரு பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் தாலி என்ற பேச்சுக்கே இடமில்லையே! அப்படி இருக்கும் பொழுது தமிழர்களுக்குத் தொடர்பே இல்லாத தாலியைப்பற்றி தமிழர்கள் விவாதம் நடத்தக் கூடாதா? இடையில் புகுத்தப்பட்டது குறித்து கருத்துத் தெரிவிக்கக் கூடாதா?

அப்படியே பார்த்தாலும் தாலி என்ற சொல்லுக்குப் பனை ஓலை - தொங்க விடுவது என்றுதான் பொருள். இப்பொழுது தாலியை இவ்வாறு தான் பயன்படுத்து கிறார்களா?

தங்கத்தினால்  செய்து அல்லவா தொங்க விடுகிறார்கள். கழுத்தை உறுத்தும் என்பதற்காக இரவில் கழற்றி வைத்து விடுவதில்லையா? அப்பொழுது மட்டும் ஆச்சாரம் கெடாதா? ஏழைகள் அவசரத் துக்குத் தாலியை அடகு வைக்கிறார்களே- இந்துத்துவாவாதிகள் அடகுக் கடைகள் முன் ஆர்ப்பாட்டம் செய்வார்களோ!

தாலியிலும்கூட ஆரியம் ஜாதியைத் திணித்துள்ளதே! பறத்தாலி, பாப்பாரத் தாலி, பொட்டுத் தாலி, பிறைத்தாலி, சிலுவைத் தாலி என்று பிரித்து வைத்துள்ளார்களே! புலித்தாலி என்றால் காட்டுக்குச் சென்று புலியோடு சண்டை போட்டு புலியின் பல்லைப் பிடுங்கி வந்து, காதலியின் கழுத்தில் தாலியாகக் கட்ட வேண்டுமாம்! எத்தனைப் பேர் தயார்! ராம கோபாலன் கம்பெனிகள் முன் வரட்டுமே!

தந்தை பெரியார் அவர்களால் 1928 முதல்  (மே - 28) அறிமுகப்படுத்தப்பட்டு அறிஞர் அண்ணா அவர்கள் முதல் அமைச்சராகவிருந்த போது சுயமரியாதைத் திருமணத்தைச் சட்டப்படி செல்லுபடி யாக்கும் சட்டத்தைச் செய்வித்தாரே- (20.1.1968 - குடியரசு தலைவர் ஒப்புதல்) அந்தத் திருமண சட்டத்தில் தாலியைக் கட்டாயமாக்கவில்லையே! மாலை அணிவித்தாலோ, மோதிரம் மாற்றிக் கொண் டாலோ போதும் என்று கூறப்பட்டுள்ளதே!

ஆயிரக்கணக்கான பெண்கள் அக்கொள்கையை ஏற்று தாலி கட்டாமல் திருமணங்களைச் செய்து கொண்டு வருகிறார்களே - ஏற்கெனவே ஏதோ ஒரு சூழ்நிலையில் தாலி கட்ட நேர்ந்த நிலையில், திராவிடர் கழக மேடைகளில் தாலி அகற்றும் நிகழ்ச்சி சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறதே - இப்பொழுதுகூட புதிய தலைமுறை ஒளிபரப்புப் பிரச் சினையில் எந்தஒரு தமிழ்நாட்டுப் பெண்ணும் எதிர்ப்புக் குரல் கொடுக்க வில்லையே! இந்த இந்து வெறி ஆண்கள் தானே குதியாட்டம் போடுகிறார்கள்.

ஒரு பெண் திருமணம் செய்து கொண்ட தற்கு அடையாளம்தான் தாலி என்றால், ஓர் ஆண் திருமணம் செய்து கொண்டதற்கு என்ன அடையாளம்? என்று தந்தை பெரியார் எழுப்பிய வினாவுக்கு என்ன பதில்? பார்ப்பனர்கள் நடத்தி வைக்கும் சூத்திரர்கள் வீட்டுத் திருமணத்தில் ஒரு சடங்கை மறக்காமல் செய்வார்கள்.

மணமகன் சூத்திரன் என்பதால், அவனுக்கு மந்திரங்கள் ஓதப்படக் கூடாது என்ற அவாளின் சாத்திர முறையால் மணமகனுக்குப் பூணூல் அணிவிப்பார்கள் கல்யாண சடங்குகள் முடிந்த நிலையில் மறக்காமல் அந்தப் பூணூலைக் கழற்றிக் குப்பையில் தூக்கி எறிந்து விடுவர்; பூணூல் மட்டும் தற்காலிகம்; தாலி மட்டும் நிரந்தரமா? எது பார்ப்பனர்களின் உயர் ஜாதி ஆதிக்கத்தை நிலை நிறுத்துகிறதோ, அதனைக் கட்டிக் காப்பதுதான் அவாளின் திடச்சித்தம்!

ஊடகங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். அடிப்படை மதவாதத்தின் ஆபத்தைப் புரிந்து கொண்டு அதன் ஆணி வேரை வீழ்த்தும் பணி என்பது எத்தகைய முக்கியமானது என்பதை இப்பொழுதாவது புரிந்து கொண்டு அதற்கேற்ப நிகழ்ச்சிகளை  தயாரிக்க வேண்டும் ஒளிபரப்ப வேண்டும்.

அதை விட்டு விட்டு எல்லோரையும் திருப்திப்படுத்துவது என்ற பெயரால் மசாலா கலவை நிகழ்ச்சிகளை நடத்திச் சென்றால் இந்த அடிப்படைவாதிகளின் கொம்புகள் மேலும் கூர்மை அடையத்தான் செய்யும் - எச்சரிக்கை! தனக்கு வந்தால்தான் தலைவலியும் திருகுவலியும் என்ற மனப்பான்மை கூடாது!

பிஜேபி, சங்பரிவாரைச் சேர்ந்தவர்கள் குறிப்பிட்ட ஊடகத்தின் நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளப் போவதில்லை என்று அறிவித்துள்ளனராம். இந்தச் சந்தர்ப்பத்தை ஊடகத் துறையினர் நன்றாகப் பயன்படுத்திக் கொண்டு பாசிசக் குப்பைத் தொட்டிகளை வெளியே நிறுத்தி விடும் அரிய வாய்ப்புக் கிடைத்திருக்கிறது என்றே மகிழ வேண்டும்.

அதே நேரத்தில் சென்னையில் ஒரு தனியார்த் தொலைக்காட்சியில் இந்தப் பிஜேபி மதவாத சக்திகள் கொடுத்த அழுத்தத்தினால் ஒரு பிரபலமான புகழ் பெற்ற ஊடகலியலாளர் ஒதுக்கி வைக்கப்பட்டாரே! தலைவர்கள் கண்டித்து அறிக்கை விடுத்தும் நிருவாகம் யாருக்குப் பணிந்தது என்பது எல்லோருக்கும் தெரியுமே! அந்தத் தைரியம் தான் இப்பொழுதும்.

ஏதோ புதிய தலைமுறைக்கு வந்தது என்று நினையாமல் (அது ஒரு குறியீடுதான் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களும் கூறியுள்ளார் இந்தக் கருத்தை) மற்ற நிறுவனங்களிலிருந்தும் பாசிசக்  குப்பைகளை வெளியே வீசுவது அவர்களுக்கும், நாட்டுக்கும் நல்லதே!

............

போப் முதல் புதிய தலைமுறை வரை

கருத்துச்சுதந்தரம் என்பதைக் கடுகளவும் அனுமதிக்காக குணம் பாசிசத்தில் பிரதானமானது. இங்கு இருக்கும் ஒரே கலாச்சாரம் இந்துக் கலாச்சாரம் மட்டுமே - என்பதுதான் ஆர்.எஸ்.எஸ்.கூட்டத்தின் முடிந்த முடிவு.

அதற்கு மாறாக இன்னொரு கலாச்சாரம் என்பதுபற்றி அவர்களால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. அப்படி யாரேனும் அத்தகையப் பிரச்சாரப் பணிகளில் ஈடுபடுவார்களேயானால் தசைப்பலத்தால் விநீறீமீ றிஷீஷ்மீக்ஷீ அவர்களை எலும்பு, சதை இல்லாமல் ஆக்கிவிடுவார்கள்.

சிவசேனை - பா.ஜ.க.கூட்டணி ஆட்சியில் மும்பை நகரப் பகுதிக்குள் யார் கலை நிகழ்ச்சி நடத்தினாலும் அவர்கள் முன்கூட்டியே பால்தாக்கரேயின் மகன் உத்கர்தாக்கரே குழுவிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். இல்லாவிட்டால் நிகழ்ச்சிகள் தூள் தூள்தான்! அதுபோல, எத்தனையோ நிகழ்வுகள் நடந்ததுண்டு.

1998 டிசம்பர் 2-இல் மும்பை நகரிலும், டிசம்பர் 3-இல் டில்லியிலும் தீபாமேத்தாவின் ஃபயர் திரைப்படத்திற்கு எதிராக சிவசேனையினர், சங்பரிவாரத்தினர் பெரும் இரகளையில் ஈடுபட்டனர். சுவரொட்டிகள் தீயிடப் பட்டன. திரையரங்குகள் அடித்து நொறுக்கப்பட்டன!

1998 ஏப்ரல் 26 ஆம் நாளன்று சிவசேனைக் காலிகள் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பிரபல பாடகரான குலாம் அலி நிகழ்த்த இருந்த இசை நிகழ்ச்சி அரங்கினுள் நுழைந்து துவம்சம் செய்தார்கள்.

1996 மே திங்களில் மும்பையில் இர்ஃபான் ஹூசேனி ஓவிய அரங்கு தீக்கிரையாக்கப் பட்டது. 20 ஆண்டுகளுக்கு முன் இந்து மதக்கடவுளச்சியான சரஸ்வதியை ஆபாசமாக வரைந்திருந்தாராம் - அதுதான் காரணமாம்.

கோபிகாஸ்திரீகளை நிர்வாணப்படுத்தி ரசித்த கோகுல கிருஷ்ணனை கடவுளாகக் கும்பிடும் இந்த கூட்டத்துக்கு இதுபோலெல்லாம் சிந்திப்பதற்கே முதலில் அருகதை கிடையாதே! ஓவியர் ஹூசேன் ஓவியங்கள் அழிக்கப்பட்டபோது சிவசேனையின் தலைவர் பால்தாக்கரே என்ன கூறினார்?

ஹூசேன் ஹிந்துஸ்தானத்துக்குள் நுழைய முடிகிறதென்றால், நாங்கள் அவர் வீட்டுக்குள் நுழைய முடியாதா? என்று ஆணவத்துடன் கேட்டார் அந்த ஆரியப் பிதாமகர்!

1999 செப்டம்பர் 23 உ.பி.தலைநகரான லக்னோவில் நாடகத்தை நடத்திவிட்டு, சஹ்மத் ரங்க்மஞ்ச் நாடகக்குழு திரும்பிக்கொண்டிருந்த போது பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ். கும்பல் வழிமறித்துத் தாக்கி கலைஞர்களைப் படுகாயப்படுத்தியது.

உ.பி.மாநில பிஜேபி மேலவை உறுப்பினரான (எம்.எல்.சி) அஜீத் சிங் என்பவரின் டாடா சுமோ வாகனத்தில் வந்துதான் அந்தக்காவிக் கொலைவெறிக்கும்பல் தாக்குதலைத் தொடுத்தது.

1999 மே நாளன்று கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு அருகே ஆனெகல் என்ற இடத்தில் சமுதாய நாடகக் குழுவினர் நாடகம் நடத்திக் கொண்டிருந்தபோது பெங்களூர் மாநகராட்சி பா.ஜ.க. உறுப்பினர் எம்.நாகராஜ் தலைமையில் காவிக் கும்பலால் கலைஞர்கள் தாக்கப்பட்டனர்.

1999 நவம்பரில் இந்தியாவிற்கு வந்த உலகக் கத்தோலிக்க மக்களின் தலைவரும் வாடிகன் நகரின் ஆட்சித் தலைவருமான இரண்டாவது ஜான்பால் எப்படியெல்லாம் அவமதிக்கப்பட்டார்?

இந்தியாவில் புகழ்பெற்ற நடிகரான திலீப்குமார் - பாகிஸ்தான் அரசிடம் பெற்ற விருதைத் திருப்பித் தர வேண்டும் என்று கோரி 1999 ஜூலை 13 ஆம் நாள் டில்லியில் லி-மெரிடின் ஓட்டலுக்கு முன் சிவசேனையினர் திலீப்குமாரின் கொடும்பாவியைக் கொளுத்தி ஆட்டம் போட்டனர்.

இவ்வளவுக்கும் வாஜ்பேயி, அத்வானி ஆகியோரின் ஆசிர்வாதம் அனுமதியுடன் தான் அந்த விருதை திலீப்குமார் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதிகாரங்களைக் கையில் வைத்துக்கொண்டிருந்த அந்த பெரிய மனிதர்கள் இந்தியத் தலைநகரிலே நடைபெற்ற இந்த கேடுகெட்ட செயலைத் தடுத்து நிறுத்த முன்வரவில்லை - என்ன வெட்கக்கேடு!

அவுட்லுக் இதழின் பிரபலமான கார்ட்டூனிஸ்ட் இர்பான் ஹூசேன். வகுப்புவாத வெறித்தனங்களை தமக்கே உரித்தான நுட்பத்தோடு கார்ட்டூன் மூலம் தோலுரித்துக் காட்டக்கூடியவர் - பொறுக்குமா காட்டு மனிதர்களுக்கு?

குரூரமான முறையில் அந்த மாபெரும் ஓவியனைக் கொலை செய்து சாக்குப்பைக்குள் போட்டுத் தைத்து சாக்கடைக்குள் உருட்டி விட்டுவிட்டனர். பாகிஸ்தான் இந்தியாவோடு கிரிக்கெட் விளையாடக் கூடாது என்பதற்காக ஆடு களத்தைச் சேதப்படுத்தியவர்கள் யார்?
ஏன் வெளியில் போவானேன்? சென்னையில் பாரதியார் நினைவிடத்தில் என்ன நடந்தது?

1998 செப்டம்பர் 13 அன்று சென்னை- திருவல்லிக்கேணியில் உள்ள கவிஞன் பாரதி நினைவு இல்லத்தில் கவிதைத் திருவிழா நடத்தப்பட்டபொழுது இந்து வெறியர்கள் தடிகளுடன் உள்ளே புகுந்த கவிஞர்களைத் தாக்கி தந்தை பெரியார், லெனின், அண்ணல் அம்பேத்கர் ஆகியோரின் நூல்களைக் கிழித்து எறியவில்லையா?

பாசிசத்தின் தகப்பன் முசோலினி இன்று உயிரோடு இருந்திருந்தால் இந்த இந்துத்துவா கூட்டத்திடம் பிச்சையல்லவா வாங்கி இருப்பான்!
வந்தே மாதரம் பாடல் உ.பி.அரசால் கட்டாயப்படுத்தப்பட்டது. சரஸ்வதி வந்தனாவும் அங்குக் கட்டாயம். இந்த நிலையில் இஸ்லாமிய மார்க்க அறிஞர் அபுல் ஹசன் அலி நத்வி அந்தப் பாடல்கள் பாடப்படும் பள்ளிகளுக்கு இஸ்லாமியப் பிள்ளைகளை அனுப்ப வேண்டாம் என்று கூறினார்.

அதன் தொடர்ச்சியாக என்ன நடந்தது? அந்த மார்க்க அறிஞன் வீட்டில் திடுதிப்பென்று நுழைந்து உ.பி.மாநிலக் காவல் துறை சோதனையிட்டு அவமானப்படுத்தியது (23.11.1998)

மற்ற மற்ற இடங்களில் நடந்ததெல்லாம் சங்பரிவார்க் கும்பலின் ரவுடிசம் என்றால் இங்கு ஒரு அரசே தன் கருத்துக்கு ஆகாதாவர்களை அச்சுறுத்துவது என்னும் பாசிச முறையைக் கையாண்டது!

தீபாமேத்தாவின் வாட்டர் திரைப்படப் படப்பிடிப்பின் கெதி என்ன என்று யாருக்குத் தெரியாது? அரசு அனுமதி பெற்றிருந்தும் ஒரு செயல் தடை செய்யப்படுகிறது என்றால், அரசுக்கும் மிஞ்சிய அராஜகக்கும்பல் ஒன்று இங்கு ஆட்டம் போடுகிறது, அதன் கட்டுப்பாட்டில் அரசும் இருக்கிறது என்றுதானே பொருள்?

புதிய தலைமுறை தாக்கப்பட்டதும் இந்த தொடர்ச்சியில் தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக