வெள்ளி, 14 நவம்பர், 2014


கி.வீரமணியை ஏன் தமிழர் தலைவர் என்றோம்...?


சமூகநீதி வரலாற்றில் இந்நாள் (1980) அடிக்கோடிட்டுப் போற்றப்பட வேண்டிய பொன்னாள்.

ஆம்,பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு கல்வியிலும் , வேலை வாய்ப்பிலும் தமிழ் நாட்டில் மலர்ந்து மணம் வீசத் தொடங்கியது இந்நாளில்தான்.

எம்ஜிஆர் அவர்கள் தமிழ்நாடு முதல் அமைச்சராகயிருந்த காலகட்டத்தில் ஓர் அரசாணையைப் பிறப்பித்தார்.பிற்படுத்தப்பட்டவர்களில் ஆண்டு வருமானம் ரூபாய் 9.000 இருந்தால் இனிமேல் அவர்களுக்கு எந்தவித இட ஒதுக்கீடும் கிடையாது என்பதே அவர் பிறப்பித்த அரசாணை (1156 சமூகநலத் துறை நாள் 2.7.1979)

ஆரியம் அகமகிழ்தது ! இந்து ஏடோ *Progressive and Meaningful* அறிவிப்பு என்று தலையங்கம் தீட்டியது.

பொங்கி எழுந்தது திராவிடர் கழகம். போர் முரசு கொட்டினார் தமிழர் தலைவர் கி.வீரமணி. சமூக நீதியாளர்களையெல்லாம் பெரியார் திடலில் ஒருங்கிணைத்தார் நாடெங்கும் கண்டனக் கூட்டங்கள், மாநாடுகள்.
திமுக., காங்கிரஸ் , இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி (சி.பி.எம்.அல்ல) முஸ்லிம் லீக், ஜனதா கட்சித் தலைவர்கள் எல்லாம் ஒருங்கிணைக்கப்பட்டனர்.

தமிழர் தலைவர் தலைமையில் வருமான வரம்பு அரசு ஆணையின் கொளுத்தி அந்தச் சாம்பலை கோட்டைக்கு அனுப்பினர் திராவிடர் கழக தொண்டர்கள் (26.11.1979), அனல் பறந்தது நாட்டில். இந்தக் காலகட்டத்தில் மக்களவைத் தேர்தல் வந்தது. இந்த பிரச்சனையை முன் வைத்து திராவிடர் கழகம் பெரும் புயலைக் கிளப்பியது.

அதுவரை தேர்தலில் தோல்விகளையே கண்டறியாத எம்ஜிஆர். முதன் முதலில் மிகப்பெரிய படுதோல்வியைச் சந்திக்க நேரிட்டது. புதுவை உள்ளிட்ட 40 இடங்களில் போட்டியிட்டு 38 இடங்களில் தோல்வியைத் தழுவினர் .
திகைத்தார்.

ஏன் இந்தத் தோல்வி...?
ஆம் புரிந்துகொண்டார். தமிழ்நாட்டின் வகுப்புரிமை என்னும் புலிவாலைத் தவறாக மிதித்துவிட்டோம்

*தந்தை பெரியார் மண்* என்பதையே மறந்தோம் அதனால் வட்டியும் முதலுமாக அனுபவிக்க நேர்ந்தது என்று உணர்ந்தார். அணைத்துக் கட்சிக் கூட்டத்தை அவசர அவசரமாகக் கூட்டினார் (21.1.1980). திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் மானமிகு கி.வீரமணி அவர்களின் கருத்தையே மிக முக்கியமாகக் கேட்டார் முதலமைச்சர்.
இது தொடர்பான பிரச்சனைகளைக் கேள்விகளாக்கி அதற்கான பதில்களை அச்சிட்டு அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் அளித்து, தக்க விளக்கமும் கொடுத்தார்
முதல்வர் எம்ஜிஆர், அவர்களுக்குப் புரியும்படி கூட்டம் முடிந்து நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில்

*திராவிடர் கழகமும், அதன் பொதுச்செயலாளர் கி.வீரமணியும் வருமான வரம்பு ஆணை பற்றி செய்த பிரச்சாரத்தினை மக்கள் நம்பினார்கள் என்று ஒப்புக்கொண்டார்.*

தான் பிறப்பித்த வருமான வரம்பு ஆணையை விலக்கிக் கொண்டதோடு,

அதுவரை பிற்படுத்தடவர்களுக்கு இருந்து வந்த 31 விழுக்காடு இட ஒதுக்கீடின் அளவை 50 விழுக்காடாக உயர்த்தி அறிவித்தார்.
அது இந்நாளின்தான்


*வரலாற்றைத் தெரிந்து கொள்ளாத இனம் வறுமையில் மூழ்கிவிடும். வாழ்வையும் இழந்துவிடுமே..!

-செல்வேந்திரன் கு-

"தமிழ்தேசிய தலைவர் பிரபாகரன் உண்ணாவிரதம்"


துல்லியமாக கணித்தார் பிரபாகரன்!” – கி.வீரமணி

”பிரபாகரன் உள்ளிட்ட ஈழப் போராளித் தலைவர்களுடனான திராவிடர் கழகத்தின் பிணைப்பு என்ன?”

”விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தமிழ்நாட்டில் தங்கியிருந்தபோது, முக்கியமான முடிவுகள் எடுக்கும் முன் அவர்களின் நலம்விரும்பிகளான சகோதரர் பழ.நெடுமாறன் மற்றும் என்னைப் போன்ற வர்களிடம் கலந்து கருத்து அறியத் தவற மாட்டார். விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் ஒப்புவமையற்ற ஆற்றலைத் தொடக்கத்தில் இருந்தே சரியாகக் கணித்த இயக்கம் திராவிடர் கழகம் என்பதால், அவருக்கு அவ்வளவு நம்பிக்கை எங்களிடம்.

1986-ம் ஆண்டு நடைபெற்ற சார்க் மாநாட்டில் கலந்துகொள்ள பெங்களூரு வந்திருந்தார் அப்போதைய இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே. அவரை விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் சந்தித்து, ஈழப் பிரச்னை தொடர்பாக சுமுகமான உடன்படிக்கை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி விரும்பினார். தன் விருப்பத்தை தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரிடமும் தெரிவித்து, ஆவன செய்யும்படி கேட்டுக் கொண்டார் ராஜீவ். எம்.ஜி.ஆர் தமது உளவுத் துறை அதிகாரிகள் மூலம் தமிழ்நாடு முழுக்கத் தேடியும் பிரபாகரனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போது உடல் நலம் சரியில்லாமல் நான் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன்.

அங்கே வந்து தமிழக காவல் துறையின் உயர் அதிகாரி ஒருவர், என்னைச் சந்தித்தார். ”எப்படியாவது பிரபாகரனை பெங்களூருக்கு அனுப்பி, ஜெயவர்த்தனேவைச் சந்திக்கச் செய்யுங்கள்’ என்று முதல்வர் உங்களிடம் தகவல் சொல்லச் சொன் னார்’ என்றார். அந்த அதிகாரிக்கு எங்களைப் பற்றி தெரியும். அப்போது பிரபாகரன் எங்கு இருக்கிறார் என்று உண்மையாகவே எனக்குத் தெரியாது. ‘தகவல் அனுப்ப முடிந்தால், அவசியம் சொல்லி அவரை பெங்களூருக்கு அனுப்ப முயற்சிக்கிறேன்’ என்றேன்.

ஆச்சர்யமாக, அதே நாளில் எனது உடல்நிலையை விசாரிக்க மருத்துவமனைக்கு திடீரென்று வந்து நின்றார் தம்பி பிரபாகரன்! என்னால் நம்பவே முடியவில்லை. பிரபாகரனிடம் எம்.ஜி.ஆரின் ஆலோசனையைப் பற்றி சொல்லி, அவரை பெங்களூருக்குச் செல்லுமாறு கேட்டுக்கொண்டேன். அவர் அதில் ஆர்வம் காட்டவே இல்லை. ஆனால் ‘நீங்கள் செல்லாவிட்டால், ஈழத் தமிழர்களுக்கு நல்விளைவு ஏற்படுவதில் உங்களுக்கு விருப்பம் இல்லை என்கிற பேச்சு உருவாகும்’ என்றெல்லாம் அவரைச் சமாதானப்படுத்த முயற்சித்தேன். இறுதியில், “அந்தச் சந்திப்பினால் எந்த விளைவும் ஏற்படாது. ஆனாலும், தமிழக முதல்வர் மற்றும் உங்களைப் போன்றவர்கள் சொல்வதால் ஒப்புக்கொள்கிறேன்” என்றார். அவரது கணிப்புதான் பிறகு சரி என்று ஆனது!

பின்னர், புலிகளின் தொலைத்தொடர்புக் கருவிகளை தமிழக அரசு பறிமுதல் செய்ததை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்தார் பிரபாகரன். ‘உண்ணாவிரதத்தைக் கைவிட்டுவிட்டுப் போராடுங்கள்’ என்று அறிக்கை விடுத்தேன். அதை ஏற்று உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ள முன்வந்தனர் புலிகள். சென்னை இந்திரா நகரில் நடந்த உண்ணாவிரதத்தை பழரசம் கொடுத்து நாங்கள் முடித்துவைத்தோம். ஆயுதங்களையும் திரும்பத் தரும் நிலை உடன் வந்தது.

புலிகள் இயக்கத்தின் தளபதி கிட்டு ஆற்றலும் அறிவும் பண்பும் நிறைந்தவர். ஆன்டன் பாலசிங்கமும் எங்களிடம் பல நேரங்களில் அறிவார்ந்த ஆலோசனைகளைப் பெறுவார். பேபி (சுப்பிரமணியம்), எப்போதும் அன்புடன் பழகிய அதிகம் பேசாத தம்பியின் தளகர்த்தர். இப்படி பலரும் அன்புடன் பழகியவர்கள். இதையெல்லாம் நினைவுகூர்ந்து எழுதும்போது என்னை அறியாமல் கண்கள் பனிக்கின்றன!”

விகடன் மேடை – கி.வீரமணி பதில்கள்


பெண்கள் சூட்டிய பட்டம் "பெரியார்"




1938- நவம்பர் 14 தமிழ்நாட்டின் வரலாற்றில் வீரஞ்செறிந்த ஒப்பரும் நாள்.

இந்நாளில் தான் இந்தி எதிர்ப்புமக்களிடத்தில் பெண்கள் முதன் முதலாகப் போர்க்களம் பூண்டு, மறியல் செய்து சிறைக்கோட்டம் சென்ற மயிர்க் கூச்செறியும் மகத்தான நாள்.

இதற்கு முதல் நாள்தான் (13.11.1938) சென்னை ஒற்றைவாடை அரங்கில் தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடு திருவாட்டி நீலாம்பிகை அம்மையார் (மறை மலை அடிகளாரின் மகள்) மாநாட்டின் தலைவர்.
தோழியர் மீனாம்பாள் சிவராஜ் தமிழ்க்கொடி உயர்த்தினார்.

பண்டிதை நாராயணி அம்மையார் மாநாட்டைத் திறந்து வைத்தார்.
தாமரைக்கண்ணி அம்மையார் வரவேற்புரையாற்றினார். நாகம்மையார் படத்தினை தோழியர் பார்வதி அம்மையார் திறந்து வைத்தார். டாக்டர் தருமாம்பாள், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் போன்றோர் கலந்து கொண்டனர்.

அம்மாநாட்டில் தான் *பெரியார்* என்ற பட்டம் சூட்டப்பட்டது

*இந்தியாவில் இதுவரை தோன்றிய சீர்திருத்த தலைவர்களால் செய்ய இயலாமற் போன வேலைகளை நம் மாபெரும் தலைவர் ஈ.வே.ரா. அவர்கள் செய்து வருவதாலும், தென்னாட்டில் அவருக்கு மேலாகவும் , ஒப்பாகவும் நினைப்பதற்கு வேறு ஒருவர் இல்லாமையானும் அவர் பெயரைச் சொல்லிலும் , எழுத்திலும் வழங்கும்போது பெரியார் என்ற சிறப்புப் பெயரையே வழங்க வேண்டும் *

என்று முதல் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.
அம்மாநாட்டில் தந்தை பெரியார் ஆற்றிய உரை இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பெண்கள் பங்கு பெறச் செய்யத் தூண்டினார் என்று குற்றம் சாட்டப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது.

தந்தை பெரியார் உரை கேட்டு மகளிர் போர்க்கோலம் பூண்டனர்.
நவம்பர் 14 1938 இதே நாளில் சென்னை பெத்து நாயக்கன் பேட்டை காசி விசுவநாதர் கோயில் அருகிலிருந்து, டாக்டர் தருமாம்பாள், இராமாமிர்தம் அம்மையார், மலர்முகத்தம்மையார், பட்டம்மாள் (பாவலர் பாலசுந்தரம் அவர்களின் துணைவியார்), சீதம்மாள் ஆகியோர் இந்து தியாலாஜிகல் பள்ளி நோக்கி மறியலுக்கு புறப்பட்டனர் -கைது செய்யப்பட்டனர்.

நீதிபதிகள் எவ்வளவோ கேட்டுக் கொண்டும் முன் வைத்த காலை பின்வைக்க மறுத்தனர் வீரத்தாய்மார்கள்.

தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மறியல் ஈடுபட்டுக் கொண்டே இருந்தனர்.
1938 இந்தி எதிர்ப்புப் போரில் சிறை சென்ற வீரப்பெண்கள் 73பேர், அவர்களுடன் சென்ற குழந்தைகள் 32பேர்.

தமிழ்நாடுப் பொது வாழ்வில் வாழ்வில் பெண்கள் போர்க் கோலம் பூண்டு சிறைக் கோட்டம் ஏங்கியது என்பது இந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில்தான்

இந்நாளை எப்படி மறக்க முடியும்!